சென்னையில் அணி திரளும் ரஜினி ரசிகர்கள்: பங்கு பெறும் அரசியல் புள்ளிகள் – என்ன காரணம்? பின்னணி என்ன?

ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சத்யகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் முன்னெடுக்கும் இந்த நிகழ்வில் அரசியல் பிரபலங்கள் பங்கெடுப்பதால் ரஜினிகாந்தை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் முயற்சியா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் மீண்டும் ரஜினி வாய்ஸ் கொடுக்கப் போகிறாரா என்றும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் நதி நீர் இணைப்பு கொண்டு வரப்பட்டால் வறுமை ஒழியும். வேலைவாய்ப்பு பெருகும். விவசாயிகளின் பிரச்சினை தீரும் என ரஜினி கூறினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததால் அதற்கு வெளிப்படையாக பாராட்டு தெரிவித்து தனது ஆதரவு பாஜகவுக்கு தான் என்று மறைமுகமாக கூறினார்.

ஆனால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

மத்தியில் பாஜகவின் நான்கு ஆண்டுகால ஆட்சி முடிவடைய உள்ள நிலையில் நதி நீர் இணைப்பு குறித்த பேச்சே இல்லை. இந்த சூழலில் வரும் மக்களவைத் தேர்தலில் கடந்த முறையைப் போல ரஜினி பாஜகவுக்கு வாய்ஸ் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தோம். “இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி. ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள நலிவடைந்த தொண்டர்களுக்கு, தொண்டர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்திருக்கிறோம். அரசியல், சினிமா உள்ளிட்ட துறைகளில் ரஜினி மேல் அதிக பிரியம் கொண்டவர்களை விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறோம். அரசியல் தலைவர்கள் பங்கெடுப்பதால் இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது” என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். “ரஜினிகாந்தின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் அல்ல அதற்கு மேல் கொட்டி கொடுத்து வருகிறது தமிழ்நாடு. அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று கூறியே தனது அரசியலை இவ்வளவு காலம் தனது ரசிகர்களிடம் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். பிரபலமில்லாத, வசதி இல்லாத நடிகர்களே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை, நல்ல காரியங்களை தமிழ் மக்களுக்கு செய்து வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு கூட இன்னொரு ரஜினி ரசிகர் தான் உதவ வேண்டியுள்ளது, அப்போது கூட ரஜினிகாந்த் எதுவும் செய்ய மாட்டார் என்பது மோசமான முன்னுதாரணம்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.