கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் கடந்த 2006-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலங்களை என்.எல்.சி நிறுவனம், அதிகார பலத்துடன் அராஜகம் செய்து தமிழ்நாடு அரசு உதவியுடன் சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியை நேற்று முன் தினம் தொடங்கியது.
சுமார் 500-க்கும் கூடுதலான காவலர்களை அந்த பகுதியில் குவித்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா ஊர்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஊர்திகளை கொண்டு வந்து, சாலைகளை தடுத்து, பொதுமக்கள் வீடுகளில் சிறைபடுத்தப்படுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணி அரங்கேறியது.
இந்த அராஜக, கொடுங்கோன்மை செயலை கண்டித்து, மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி போராட வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போலீசாரின் கைது நடவடிக்கைக்கும், அடக்குமுறைக்கும், என்எல்சியின் அராஜகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், என்எல்சி மற்றும் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் அறிவித்தார்.
அறிவித்தது போலவே இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் வணிகர்கள் தங்களின் கடையை அடைத்து, பாமகவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
கடலூர் நகரம், சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, வடலூர், நெல்வேலி, மந்தாரக்குப்பம், திட்டக்குடி, விருத்தாச்சலம், கம்மாபுரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு காணப்பட்டது.
இதற்கிடையே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு பேருந்துகள் போலீசாரின் பாதுகாப்புடன் மட்டுமே இயக்கப்பட்டன. கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், என்எல்சிக்கு எதிராக, கட்சி பாராமல் கடைகளை மூடிய வணிகர்களை ஆளும் கட்சியினர் என்ற போர்வையில் மர்ம நபர்கள் சிலர் மிரட்டி திறக்க சொல்லியதாக புகார் எழுந்துள்ளது.