கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை உள்ளது. இங்கு, சிறிய ரக தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு, பழைய வயர்களில் இருந்து செம்பு கம்பிகளை பிரித்தெடுக்கும் வேலைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹோலி பண்டிகையை கொண்டாட இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய சில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வந்திருந்தனர். இந்நிலையில், பணியில் இருக்கும்போது நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிற்சாலைக்குள் தீடீரென தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால், சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகையால் சூழ்ந்தது.
உடனே, பணியாற்றி கொண்டிருந்த 8 தொழிலாளர்களும் அவசர அவசரமாக தொழிற்சாலையைவிட்டு வெளியேறினர். இதனால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்தது. ஒரு மணி நேரமாக தண்ணீர் பிச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், செம்பு பிரித்தெடுக்கும் பணியின் போது வெல்டிங் இயந்திரத்தில் இருந்து தீப்பொறி சிதறி தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என தொடர்ந்து விசாரணை நடத்தினர்.