ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல பல மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு பல ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ரயில் மூலமாக வருவதாகவும் கூறப்படுகின்றது. அதுவும் விழா நாட்களில் இது பல மடங்கு அதிகரிக்கும். தற்போதைய ரயில் நிலையத்தில் உள்ள 4 பிளாட்பாரத்தில் இரண்டில் கூரை இன்றியும், கழிப்பறை, ஓய்வறை, கார் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை.
இந்நிலையில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டு, அடுத்த 18 மாதங்களில் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற கோவை தனியார் நிறுவனத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த அனுமதி வழங்கியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காத்திருப்பு கூடம், டிக்கெட் கவுன்ட்டர், வணிகப் பகுதி, ரயில்வே அலுவலகங்களுடன் கிழக்கு முனையம் அமைக்கப்படுகிறது. மேலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு நகரும் மின் படிக்கட்டு, மின் தூக்கிகளும், ஓய்வறைகளும் அமைக்கப்படவுள்ளன. வடக்கு முனையத்தில் ப்ரி பெய்ட் டாக்சி வசதி, உதவி மையங்கள், தனி வழித்தடத்துடன் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.