690 காளைகள் சீறிப்பாய்ந்தன ஆவியூரில் மாசி  களரி  ஜல்லிக்கட்டு அமர்க்களம்: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்

காரியாபட்டி: ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 690 காளைகள் சீறிப்பாய்ந்தன.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் அழகிய பெருமாள் சாமி, பெரிய கருப்பண்ண சாமி கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் புதுக்கோட்டை, திருச்சி,  திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு  பகுதிகளில் இருந்து 690 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றன. இதில் காளைகளை அடக்க முயன்ற 15 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள், குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயர்ன்பாக்ஸ், சில்வர் பாத்திரம், பணம், வேட்டி, அண்டா போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கரூண் காரட் உத்தராவ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி கடைசி நேரத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.