ஆஸ்கர் விழாவில் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில் இருக்கை, புது சர்ச்சை

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது.

நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்ற டால்பி தியேட்டர் அரங்கில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலிக்கு கடைசி வரிசையில்தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது குறித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவில்தான் இருக்கைகள் ஒதுக்கப்படுமாம். விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளவர்கள் மட்டும் ஒரு சிலரை அழைத்து வர அனுமதி உண்டாம். மற்றபடி அந்த அரங்கில் 3,317 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளதாம்.

அந்த விதத்தில் சிறந்த ஒரிஜனல் பாடல் விருதைப் பெற்ற கீரவாணி தரப்பில் இருந்துதான் சிறப்பு அனுமதி பெற்று ராஜமவுலியும், அவரது மனைவியும் கலந்து கொண்டிருக்க முடியும் என்கிறார்கள். அதே சமயத் தீபிகா படுகோனே முன் வரிசையில் அமர்ந்தது பற்றியும் கேள்வி எழுந்தது. அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டதால் அவருக்கு அங்கும் இடம் தரப்பட்டதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.