திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதால் திருப்பூர் போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் போலீசார் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த நான்கு நைஜீரியர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் உபா, அக்பாம்பாஸ்கல், ஜான்பால் மெக்டி, ஓபின்னா என்பதும் இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்து சட்டவிரோதமாக தங்கி பனியன் தொழில் செய்து நைஜீரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.