மதுரை: நீட் விலக்கு மசோதாஉள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்பியின் கடிதத்திற்கு, ஜனாதிபதி முர்மு பதில் அளித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரப்பிலிருந்து கடந்த 2ம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. அதில், ‘‘ஜன.19ம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றது. இந்த கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தையும் எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் ‘அனிதாக்களின் கல்வி உரிமை. குடியரசு தலைவரின் பதிலும், முதல்வரின் பெயர் சூட்டலும்’ என்ற தலைப்பில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி நான் எழுதிய கடிதத்திற்கு, உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முர்மு பதிலளித்துள்ளார். அரியலூர் மருத்துவக்கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே. இவ்வாறு தெரிவித்துள்ளார்.