கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பணியில் சேருவதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
அப்போது, தேர்வு எழுதிய நான்கு பேரில் போட்டோ மற்றும் கைரேகை உள்ளிட்டவை மாறுபட்டுள்ளது. இதனால், சந்தேகப்பட்ட அதிகாரிகள் நான்கு பேரிடம் ஆங்கிலத்தில் எழுதுமாறும், பேசுமாறும் தெரிவித்த போது, அவர்கள் தடுமாறியுள்ளனர்.
அப்போது தான், அதிகாரிகளுக்கு இவர்கள் நான்கு பேரும் ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.