வாஷிங்டன், அமெரிக்காவின், ‘சிலிக்கான் வேலி’ வங்கி திவால் ஆனது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பாதியில் வெளியேறினார்.
கொரோனா ஊரடங்கு, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற அடுத்தடுத்த சம்பவங்களால், அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை படிப்படியாக உயர்த்தியது. இதனால் கடன் பத்திரங்கள் மதிப்பிழக்க துவங்கின.
கடன் பத்திரங்களில் போட்ட முதலீட்டை பலரும் திரும்ப பெற்றனர். இதனால், அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திணறியது.
ஒரே நாளில் அந்த வங்கியின் பங்கு மதிப்பு 60 சதவீதம் குறைந்தது. கடந்த 10ம் தேதி அந்த வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை அதிபர் ஜோ பைடன் நேற்று சந்தித்தார். அப்போது, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இடைமறித்த நிருபர் ஒருவர், ‘மிஸ்டர் பிரெசிடென்ட், சிலிக்கான் வங்கி ஏன் திவால் ஆனது என்பது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இது அமெரிக்க பொருளாதாரத்தில் வேறு விளைவுகளை ஏற்படுத்தாது என உங்களால் உறுதி அளிக்க முடியுமா’ என, கேள்வி எழுப்பினார்.
கேள்வி கேட்ட அடுத்த நொடியே, சட்டென்று திரும்பி பின்னால் இருந்த கதவை திறந்து, அதிபர் பைடன் வெளியேறினார். ”மற்ற வங்கிகளும் பாதிக்கப்படுமா?” என, அந்த நிருபர் தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார். ஆனாலும், பைடன் வெளியேறினார்.
இந்த காட்சிகள், ‘யுடியூப்’ சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது. வெளியான சில மணி நேரத்தில் 40 லட்சம் பேர் இந்த காணொளியை கண்டுஉள்ளனர். பலர் கடுமையான, ‘கமென்ட்’களை தெரிவித்து வருவதால், ‘கமென்ட்’ தெரிவிக்கும் வசதி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து பைடன் பாதியில் வெளியேறுவது புதிதல்ல. சீன உளவு பலுான் விவகாரத்தின் போதும், கொலம்பியா அதிபரை அவர் சந்தித்த போதும் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தும் அதிபர் பைடன் இதுபோல பாதியில் வெளியேறி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்