புதுடில்லி,நம் வெளியுறவுத் துறை நடத்தும் நான்கு நாள் பயிற்சி வகுப்பில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர்.
நம் வெளியுறவு அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் அமைப்பின் வாயிலாக, நம் நாட்டின் சிறப்பம்சங்கள் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகையில், கோழிக்கோடு ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை மையத்துடன் இணைந்து, நான்கு நாள் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சிந்தனையில் இணைந்திடுங்கள் என்ற பெயரில், நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கும் வகையில், இந்த பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின. இதில், ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று உள்ளனர்.
கடந்த, ௨௦௨௧ல் ஆப்கானிஸ்தான் ஆட்சிப் பொறுப்பை, தலிபான்கள் கைப்பற்றினர்.
ஆனால், இதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் அங்கு நடைபெறும் மனிதாபிமான அடிப்படையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளன.
இதன்படி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய துாதரகங்களை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்