திருச்சி : உயர்நீதிமன்ற தீர்ப்பால் கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாகி இருப்பதாகவும், குடியிருப்பு வாசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போர் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீர்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேச வேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.