ஹைதராபாத், தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அரசு ஊழியர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது.
இங்கு, டி.எஸ்.பி.எஸ்.சி., எனப்படும் தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தால், அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த 5ல், உதவி பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இதை, ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.
ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.எஸ்.பி.எஸ்.சி., அறிவித்தது. மேலும், மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், உதவி பொறியாளர் பணி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், டி.எஸ்.பி.எஸ்.சி., ஊழியர் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து, தென் மேற்கு மண்டல காவல் துணை கமிஷனர் கிரண் காரே கூறியதாவது:
டி.எஸ்.பி.எஸ்.சி., செயலர் அளித்த புகாரின்படி, பேகம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, டி.எஸ்.பி.எஸ்.சி.,யில் உதவிப் பிரிவு அதிகாரியாக பணிபுரியும் புலிதிண்டின் பிரவீன் குமார், அவுட்சோர்சிங் ஊழியர் ராஜு உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பிரவீன் குமார், ராஜு இருவரும் ரகசியப் பிரிவின் கணினியிலிருந்து வினாத்தாளை திருடி உள்ளனர்.
இதை பிரின்ட் அவுட் எடுத்து, சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்