அமைதிக்கான நோபல் பரிசு உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும், மோதல்களை தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பை செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டி, அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்தக் குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், “நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்.
பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வென்றால் அது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக இணையத்தில் தகவல் வைரலாகப் பரவியது.

இந்த நிலையில், அந்தத் தகவல் முற்றிலும் பொய் என ஆஸ்லே டோஜே விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ஒரு போலி செய்தி ட்வீட்டாக அனுப்பப்பட்டிருக்கிறது. அதை நாம் போலி செய்தியாகத்தான் கருத வேண்டும். அதை பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். நான் இந்தியாவுக்கு நார்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவராக வரவில்லை. சர்வதேச அமைதி மற்றும் புரிதலுக்கான இயக்குநராகவும், இந்தியாவின் நண்பராகவும் இங்கு வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.