மும்பை: பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தன் மனைவியிடம் லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக சட்டப்பேரவையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், மும்பை மலபார் ஹில் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் அனிக் ஷா என்ற பெண் தனக்கு லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யவும் முயன்றார் என கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து துணை முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது: எனது மனைவி அம்ருதாவுக்கு அனிக்ஷா என்ற பெண் ஆடை வடிவமைப்பாளர் கடந்த 2015-16-ம் ஆண்டு அறிமுகமானார். அவர் சமீபத்தில் தான் வடிவமைத்த ஆடைகளை அணியும்படி என் மனைவியிடம் கூறியுள்ளார். நன்கு பழகியபின் தனது தந்தை அனில் ஜெய்சிங்கானி மீது 15 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து அவர் விடுபட உதவும்படியும் அனிக் ஷா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மனு அளித்தால், அதை என்னிடம் கொடுப்பதாக என் மனைவி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் மீண்டும் துணை முதல்வரான பின், தனது தொடர்புகள் குறித்து அனிக் ஷா, மோசடியில் சிக்க வைக்கும் நபர்களுடன் கூறியுள்ளார். அவரது தந்தை மீதான வழக்குகளை ரத்து செய்யவில்லை என்றால், அவர் என்னை சிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார். வழக்குகளில் இருந்து தனது தந்தையை மீட்டால் ரூ.1 கோடி தருவதாகவும் அந்த பெண் என் மனைவியிடம் கூறியுள்ளார்.
அனிக் ஷாவின் போன் எண்ணை அம்ருதா பிளாக் செய்த பின், வேறு எண்களில் இருந்து ஆடியோ, வீடியோ பதிவுகளை வெளியிட்டு எனது மனைவியை பிளாக்மெயில் செய்ய அவர் முயற்சித்துள்ளார். ஒரு வீடியோவில் பை நிறைய பணம் வைத்து எனது வீட்டு உதவியாளரிடம் அனிக் ஷா கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
அந்த வீடியோவில் பணம் உள்ள பையும், வீட்டு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பும் பையும் வெவ்வேறானது என தடயவியல் சோதனையில் நிருபிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.