கிருஷ்ணகிரி: ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென வீசிய சூறைக்காற்றில் பசுமை குடில்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அன்சட்டி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவழி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன.
தொட்டிக்கான பள்ளி ஏரியில் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பீன்ஸ், குடைமிளகாய் போன்ற பயிர்களை பயிரிடுவதற்காக விவசாயிகள் அமைத்திருந்த பசுமை குடில்களும் சேதமடைந்ததால் பேரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அதிகாலை பெய்த திடீர் மழையால் அங்கு வசித்து வரும் தேவசகாயம் என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகள் இடி தாக்கி உயிரிழந்தனர். இதனால், சுமார் ரூ.2,00,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சாயல்குடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.