கன்னியாகுமரியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு – போட்டோ ஸ்டோரி

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்த அவர், விவேகானந்தர் மண்டபத்திற்கும், பாரத மாதா கோயிலுக்கும் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 9 மணிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அமைச்சர் மனோதங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோரும் வரவேற்றனர்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்கவரத்து கழக படகு துறைக்கு காரில் சென்ற குடியரசுத் தலைவர், அங்கிருந்து படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். விவேகானந்தர் மண்டபத்தை பேட்டரி கார் மூலம் சுற்றி பார்த்த அவர் அங்கு நின்றவாறே அருகே உள்ள பாறையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையையும் ரசித்தார்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் உள்ள பாரத மாதா கோயிலில் ராமாயண கண்காட்சியை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்.

பின்னர் விவேகானந்தர் மண்டபத்திற்குள் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தரின் சிலையை வணங்கி மரியாதை செலுத்தினார். அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தார். 40 நிமிடங்கள் விவேகானாந்தர் பாறையில் இருந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பின்னர் படகு மூலம் கரை திரும்பினார்.

பாரதமாதா கோயிலில் உள்ள பாரதமாதாவை வணங்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

அங்கிருந்து ஒன்றேகால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவிற்கு சென்றார். அவரை விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோயிலுக்கு சென்று வழிபட்ட அவர், அங்குள்ள ராமாயண தரிசன காட்சிகளை பார்வையிட்டார். அரை மணி நேரம் பாரத மாதா கோயிலில் இருந்த அவர், அங்கிருந்து மீண்டும் அரசு விருந்தினர் மாளிகை வந்தார். பின்னர் காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவர் இன்று 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்தார்.

விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் படகு இல்லம், மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் சென்ற பின்னர் கன்னியாகுமரியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.