அன்பு ஜோதி ஆசிரமம்: `என் மனைவியைக் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள்!' – பரபரப்பை ஏற்படுத்திய புகார்

விழுப்புரம், அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல்போன முதியவர் ஜபருல்லாவை மீட்டுத் தரும்படி அவரின் உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்பட்ட ஆசிரமத்தின் சுயரூபம் தமிழகத்தையே அதிரவைத்திருந்தது. ஜபருல்லாவுடன் 16 பேர் காணாமல்போனது, மனவளர்ச்சி குன்றியோர் துன்புறுத்தப்பட்டது, பெண்கள் பாலியல்ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது, வளர்ப்பு குரங்குகளை கடிக்க வைத்து சித்ரவதை செய்தது, உரிமம் இல்லாமலே ஆசிரமம் செயல்பட்டது என பல்வேறு தகவல்கள் பகீர் கிளப்பியிருந்தன. 

அன்பு ஜோதி ஆசிரமம்

இந்த நிலையில், இந்திய அளவிலுள்ள காப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மாயமானவர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி மேலும் அச்சத்தை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக, கெடார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட இரண்டு புகார்களின் அடிப்படையில், 13 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆசிரம உரிமையாளர்களான ஜூபின் பேபி – மரியா தம்பதி உள்ளிட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், ஆசிரமத்துக்கு எதிராக அடுத்தடுத்து புதிய புகார்கள் (missing complaint), கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேசியக் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தினர் இது குறித்து அண்மையில் நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், 21-ம் தேதி முதல் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆசிரமம் தொடர்பாக விழுப்புரத்தில் விசாரணை நடத்தி நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையிலான 5 பேர்கொண்ட குழுவினர், 21-ம் தேதி முதற் கட்டமாக அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 20 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு

அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், அன்புஜோதி ஆசிரம் குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம்… இந்த வழக்கில் இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்கள், குற்றப்பதிவுகள் என்ன என்பது குறித்து கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்றைய தினம், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர், அன்புஜோதி ஆசிரமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த தும்பூரைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான நாகராஜன் என்பவர், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தன்னுடைய மனைவி தேவியைக் காணவில்லை என புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ‘சற்று மனநிலம் குன்றிய என்னுடைய மனைவியை, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தேன். அதன் பிறகு தேவியை நேரில் பார்க்க ஆசிரம நிர்வாகிகள் என்னை அனுமதிக்கவில்லை. தற்போது என்னுடைய மனைவி தேவி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை’ என தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினரிடம் நாகராஜன் புகார் தெரிவித்தார். இதையடுத்து நாகராஜனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரிடம், இந்தப் புகார் குறித்து வழக்கு பதிவுசெய்து காணாமல்போன நாகராஜனின் மனைவியைத் தேடும்படி அறிவுறுத்தினர்.

ஏற்கெனவே இந்த ஆசிரமத்திலிருந்து 15-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போது ‘ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட என்னுடைய மனைவியைக் காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்’ என்று கரும்பு வெட்டும் தொழிலாளி புகார் அளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.