திருச்சி அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 47 பேர் பலியாகிய நிலையில், தற்போது 48வதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையின் படி, அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதை அடுத்து, தமிழக அரசு இரண்டு முறை அவசர சட்டத்தையும், மூன்று முறை சட்டப்பேரவையில் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை ஆளுநர் என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட ரவிசங்கர், ஆன்லைன் ரம்மியால் பலியாகும் கடைசி உயிர் நானாக தான் இருக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.