61 பில்லியன் டொலராக உயரும் இலங்கையின் அரசமுறை கடன்


சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனை தொடர்ந்து இலங்கையின் அரசமுறை கடன் 61 பில்லியன் டொலராக உயர்வடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதும், பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் அர்த்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

சர்வதே ச நாணய நிதியத்தின் நிபந்தகைளை செயற்படுத்தும் போது சமூக கட்டமைப்பில் என்றும் அமைதி நிலவாது, போராட்டம், முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வு ஆகியன மாத்திரம் மிகுதியாகும்.தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

நியாயமான மின்கட்டணம் அறவிடப்பட வேண்டும்

61 பில்லியன் டொலராக உயரும் இலங்கையின் அரசமுறை கடன் | Imf Loan To Sri Lanka

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் ‘ மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான மின்கட்டணம் அறவிடப்பட வேண்டும் ‘என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான கட்டணமா அறவிடப்படுகிறது.

மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்து, தமக்கு சார்பானவர்களை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்து, அரசாங்கம் முறையற்ற வகையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின்கட்டணத்தை அதிகரித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டின் துறைசார் சட்டத்துக்கு எதிராக ஒரு விடயத்தை செயற்படுத்த அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவிக்க வேண்டும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம், ஆனால் அந்த திட்டங்கள் வெளிப்படைத் தன்மையுடன் காணப்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை விற்கும் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. நாட்டில் விற்பதற்கு மிகுதியாக அரச வளங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் துறைசார் நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் கடந்த ஆண்டு (2022) வரி செலுத்தலுடன் 108 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் போது அதனுடன் தொடர்புடைய மொபிடெல் தரவு கட்டமைப்பையும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்க நேரிடும்.

நாட்டில் விற்பதற்கு தேசிய வளங்கள் ஏதும் இல்லாத நிலையில் நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய முக்கிய அம்சங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.  தொழில்சார் உரிமைக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகள் என சித்தரிப்பதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர, ஒருபோதும் தீர்வு காண முடியாது  என தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.