விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மருந்துகளின் விலை  உயர்வு நடைமுறைக்கு வரும். குறிப்பாக வலி நிவாரணி, தொற்று எதிர்ப்பு,  இருதயம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் உள்ளிட்ட வழக்கமான மற்றும்  அத்தியாவசிய  மருந்துகளின் விலை கட்டாயம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பரஸ்பரம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், வரும் ஏப். 1ம் தேதி முதல் 384 அத்தியாவசிய மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

ஆனால் மலிவு விலை மருந்து பொருட்களை சப்ளை செய்ய வேண்டும் என்று கூறிவரும் அகில இந்திய மருந்து நடவடிக்கை நெட்வொர்க்கின் இணை-கன்வீனர் மாலினி ஐசோலா கூறுகையில், ‘மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் விலைகளை நிர்ணயிப்பதால் மருந்துகளின் விலை மேலும் மேலும் உயரும்.

இத்திட்டம் 2013ம் ஆண்டு அமலுக்கு வந்த பின்னரே மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விலை உயர்வை விட (10%) காட்டிலும் கூடுதலாக விலை உயர்த்தப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, மருந்துகளை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வால், விலைக் கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய்விடும். இதுபோன்ற மருந்துகளை கட்டுப்படியாகும் விலையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.