சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முழுநேர காமெடியனாக தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர் சூரி, இந்தப் படத்தின்மூலம் ஹீரோவாகியுள்ளார்.
விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கத்தில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் விடுதலை. இந்தப் படத்திற்காக சூரி அதிகமான ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர், மேக்கிங் வீடியோக்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன. தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது விடுதலை படம்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை
ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயணட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படத்தில் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி எதிர்மறை கேரக்டரிலும் நடித்துள்ளனர். படத்தின் நாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

அதிகரித்த பட்ஜெட்
இசைஞானி இளையராஜாவின் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த 3 பாடல்களை படக்குழுவினர் லிரிக் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவே விஜய் சேதுபதி கமிட்டாகியிருந்தார். ஆனால் தொடர்ந்து படத்தின் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது படத்தின் பட்ஜெட்டும் அதிகரிக்கப்பட்டுவிட்டதாக வெற்றிமாறன் ஆடியோ வெளியீட்டில் பேசியிருந்தார்.

சிறப்பான மேக்கிங் வீடியோ
இதனிடையே படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படப்பிடிப்பின்போது கவுதம் மேனன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு வெற்றிமாறன் நடித்து காண்பிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் சண்டைக் காட்சிகளில் சூரி அதிகமான ரிஸ்க் எடுத்திருப்பதும் இந்த வீடியோவில் வெளிப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் வீட்டின் ஓடு மேல் அவர் டைவ் அடிக்கும் காட்சியில் அவர் நடித்தது குறித்தும் இந்த மேக்கிங் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நான் கதாநாயகன் இல்லை
இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை நடிகர் சூரி உள்ளிட்டோர் அளித்து வருகின்றனர். அதுபோல தன்னுடைய பேட்டியொன்றில் பேசிய சூரி, படத்தில் தான் கதாநாயகன் இல்லை என்றும் கதையின் நாயகன் என்றும் கூறியுள்ளார். அதேபோல, உன்னோடு நான் நடந்தா பாடல் குறித்து பேசிய சூரி, இதுகுறித்து முதலில் கேட்டபோது, மரத்தின் பின்னால் சென்று சிரித்துவிட்டு வந்ததாகவும் தனக்கு காதல் பாடலா என்று தனக்கு முதலில் தோன்றியதாகவும் கூறியுள்ளார்.

சிரிப்பை ஏற்படுத்திய காதல் பாடல்
ஆனால் இந்தப் பாடல் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும், தான் பார்த்து வியந்த இளையராஜாவின் இசையில் தனக்கு காதல் பாடல் என்பது கனவு நனவான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூரி, கேமரா முன்பு தான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே தனக்கு முக்கியம் என்பதும், இப்படித்தான் இந்த கேரக்டரில்தான் நடிப்பேன் என்றெல்லாம் எந்த வரைமுறையும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.