கலாஷேத்ராவில் என்ன நடக்கிறது? பாலியல் புகார் உண்மையா? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம், மகளிர் ஆணையம் விசாரணை என பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பதில்

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர்

, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய கலாஷேத்திரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரை தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து “பாலியல் தொல்லை” என டுவிட்டர் செய்தி போட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி 21-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியது.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

இது தொடர்பாக, கலாஷேத்திரா பவுன்டேஷன் இயக்குநர், மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே “நாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம். அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என 25-3-2023 அன்று டி.ஜி.பி சைலேந்திர பாபுவிற்கு கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

பின்னர் கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

கல்லூரிக்கு விடுமுறை

இந்நிலையில் மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக கலாஷேத்திரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்தேன்.

மாணவிகள் உடன் பேச்சுவார்த்தை

இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிய வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார்கள். இன்று காலை மீண்டும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினர் உடன் பேசி வருகிறார்கள்.

உரிய சட்ட நடவடிக்கை

அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.