சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதிகள் சிறையில் அடைக்கப்படும் காலம் தொடர்பான மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நாளில் இருந்து 60 அல்லது 90 நாட்களுக்கு ரிமாண்ட் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றத்தடுப்பு, பாதுகாப்பைப் பராமரித்தல் மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், சட்ட விதிகளை மீறி தனி நபர் எவரும் சிறையில் வைத்திருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விசாரணை அமைப்புகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் இயல்பாக ஜாமீன் பெற உரிமை உண்டு என்றும், குறிப்பிட்ட சில வகை குற்றங்களுக்கு, இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தனிநபரின் உரிமை மற்றும் அதன் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.