சென்னை அண்ணா சாலையில் 15 தளங்களைக் கொண்ட எல்.ஐ.சி அலுவலகக் கட்டடம் அமைந்திருக்கிறது. இந்தக் கட்டடம் 1960 காலகட்டத்தில் இந்தியாவின் உயரமானக் கட்டடம் என்ற பெருமையைக் கொண்டது. 70 வருடங்களை கடந்து கம்பிரமாக நிற்கும் இந்தக் கட்டடம், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் `எல்.ஐ.சி’ என்ற டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.
விடுமுறை தினமான இன்று மாலை இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தீ பற்றி எரிவதைப் பார்த்த ஊழியர்கள், இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்.
அதோடு, சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் நின்று வேடிக்கைப் பார்த்ததால், அங்குக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரிசெய்தனர். மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.