பீஜிங்: சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள் நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
தற்போது 2வது இடத்தில் இந்தியா இருந்தாலும் விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சுமார் 20 வருடங்களுக்கு முன்பே கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
பிறப்பு விகிதம் குறைந்தது
இதன் காரணமாக சீனாவில் , கடந்த சில வருடங்களாகவே, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை இளையோரை விட அதிகமாக உள்ளது. அதுமட்டும் இன்றி வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையும், பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தெளிவாக சொல்வது என்றால் பிறப்பு விகிதம் சரிந்தும், இறப்பு விகிதம் அதிகரித்ததால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைய தொடங்கியது.

தீவிரமாக யோசிக்கும் சீனா
இதனால் கலங்கிப் போன சீனா, கடந்த 1980 ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒருகுழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதியை தளர்த்தியது. தற்போது சீன மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த 2021ம் ஆண்டில் சட்ட விதியை மாற்றி அமைத்தது. இருந்தாலும் சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று சீனா தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறது.

புதுமண தம்பதிகளுக்கு விடுமுறை
மக்கள் அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மக்கள் தொகையை அதிகரிக்க புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது. சீனாவில் உள்ள கான்சூ, ஷாங்ஸி ஆகிய மாகாணங்களில் இந்த சலுகை கொடுக்கப்பட்டு இருந்தது. சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பல்வேறு யோசனைகளை அந்த நாட்டின் அரசியல் ஆலோசர்கள் பல்வேறு யோசனைகளை கொடுத்து வருகிறார்கள்.

காதலில் விழுவதற்காக விடுமுறை
இந்த நிலையில், சீனாவில் உள்ள சில கல்லூரிகள் முற்றிலும் புதுமையான ஒரு திட்டத்துடன் முன்வந்துள்ளது. நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த விடுமுறையை கல்லூரிகள் மாணவர்களுக்கு அறிவித்துள்ளன.

டைரிகள் எழுதுவது..
மாணவர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ளவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ளும் விதமாகவும் வசந்த கால பிரேக் என இந்த விடுமுறையை சீனாவில் உள்ள Fan Mei Education Group என்ற கல்விக் குழுமம் நடத்தும் கல்லூரிகளில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது மாணவர்கள் டைரிகள் எழுதுவது, பெர்சனல் டெவலப்மண்ட் குறித்து ஆய்வு செய்வது மற்றும் ட்ரவல் வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்ற ஹோம்வொர்க்குகளையும் கொடுத்துள்ளதாம்.