
1934-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்தவர் சலீம் துரானி. இவர், 1953-ம் ஆண்டு சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதையடுத்து 1954 – 56 ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக கிரிக்கெட் ஆடினார். தொடர்ந்து, 1956 முதல் 1978-ம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கடந்த 1960 முதல் 1973-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 75 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 1,202 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதமும், 7 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 1960-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சலீம் துரானி, 1973-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சலீம் துரானி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சலீம் துரானி வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாம்நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சலீம் துரானி ஜி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”எனத் தெரிவித்துள்ளார்.