சென்னை: 2022-23-ம் நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் அதிகபட்ச வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 2022-23-ம் நிதியாண்டில் 640 மில்லியன் (64 கோடி) பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலமாக, ரயில்வேக்கு ரூ.6,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் 339.6 மில்லியன் பேர் பயணம் செய்திருந்தனர். இதன் மூலம் ரூ.3,539.77கோடி வருவாய் கிடைத்துள்ளது
தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வணிக மேம்பாட்டு குழு அனைத்து கோட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பெருநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை எடுத்துச் சென்று சேர்க்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் 2022-23-ம் நிதியாண்டில் 37.94 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகள் 30.56 மில்லியன் டன்னாக இருந்தது. இது தற்போது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக, ரூ.3,637.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.2,806 கோடி வருவாய் கிடைத்து இருந்தது.