குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது ஸ்டியோவில் முதன் முதலில் தான் நடித்த விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்ததாக பெருமிதம் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா தனது 45 ஆண்டு கால இசைப் பயணத்தில் கதாநாயகனை அருகில் வைத்து கொண்டு ட்யூன் போடுவது இதுவே முதன்முறை என தன்னிடம் கூறியதாக சூரி நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
மேலும், மாணர்வர்கள் நன்றாக படித்து நமது மண்ணில் வேலை பார்க்க வேண்டும் என்றும் பெற்றோர்களை சிறப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் மொபைல் போன்களை தேவைக்கு ஏற்றார் போல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளது. சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு படமாக எடுக்க திட்டமிட்டு பின்பு இரண்டு பாகங்களாக இப்படம் உருவானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.