சென்னை : சூர்யா பட நடிகை ரம்யா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அர்ஜூன்,சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகை என பெயர் எடுத்த ரம்யா சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நடிகை ரம்யா மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகை ரம்யா
கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக அபி என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார் தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு வைத்து அழகுப்பார்த்தார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக என பெயர் எடுத்தார் ரம்யா.

தனுஷ்பட நடிகை
சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த ரம்யா, தனுஷூடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், ஜீவாடன் சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும்.

எம்பி ஆனார்
படங்களில் நடித்து வந்த ரம்யா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திய ரம்யா, தற்போது, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதால், விரைவில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது,

ரம்யா பேட்டி
இந்நிலையில் ஊடகம் ஒன்று பேட்டி அளித்துள்ள ரம்யா வாழ்க்கையில் கடந்து வந்த பல கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அதில், நான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த போது, என் அப்பா இறந்து விட்டார். நான் எம்பியாக இருந்ததால், வேலை பளு அதிகமாக இருந்தது. இதனால், என் அப்பாவோடு எனக்கு நேரத்தை செலவழிக்க முடியவில்லை.

தற்கொலை செய்ய நினைத்தேன்
திடீரென ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அவரோடு நான் இல்லாததை நினைத்து மிகவும் மனவேதனை அடைந்தேன். இதனால், உச்ச கட்ட மன அழுத்தம் ஏற்பட்டு பல நேரம் நாம் ஏன் வாழவேண்டும், தற்கொலை செய்து கொள்ளம் என்று கூட நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் என் மனநிலையை புரிந்து கொண்ட ராகுல் காந்தி எனக்கு ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்தார் என்று பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

துணிச்சலான பெண்
துணிச்சலான பல கருத்துக்கை சமூக வலைத்தளத்தில் முன் வைக்கும் ரம்யாவா தற்கொலை செய்து கொள்ள நினைத்தார் என்று அந்த பேட்டியை அவரது ரசிகர்கள் அதிர்ச்சியோடு பார்த்து வருகின்றனர். தற்போது, நடிகை ரம்யா, ஆப்பிள் பாக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் 2 படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும், ஓடிடி தளங்களுக்காக வெப் சீரிஸ்களையும் தயாரித்து வருகிறார்