
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் நல்லதம்பி லாரி டிரைவர் வேலை செய்து வந்ததுடன் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன் தனது அண்ணன் முத்துராஜிடம் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார்.
இந்நிலையில் அண்ணன் முத்துராஜ் தனது தம்பி நல்லதம்பியிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதற்கு நல்லதம்பி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் சில்லா நத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்ல தம்பி முத்துராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் தனது சித்தப்பா மகன் முத்துராஜ் உடன் சேர்ந்து நேற்று இரவு தனது தம்பி நல்ல தம்பியை பண்டாரம் பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் இருவரும் சரணடைந்துள்ளனர்.
தம்பி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.