ஐதராபாத் : நடிகர் ராம்சரணின் மார்கெட் வேல்யூ ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் தன்னுடைய 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்தப்படத்தின் தலைப்பு தற்போது கேம் சேஞ்சர் என்று வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் கியாரா அத்வானி, ராம் சரணுக்கு ஜோடியாகியுள்ளார்.
நடிகர் ராம்சரண்
பிரபல தெலுங்குப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணும் தெலுங்கின் முன்னணி ஹீரோ என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துவரும் நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் அதிரடி வெற்றி மற்றும் படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருதுக்கு பிறகு ராம் சரண் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் இணைந்த ராம்சரண்
தற்போது ஷங்கர் இயக்கத்தில் தன்னுடைய 15வது படத்தில் நடித்து வருகிறார். இவரது பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 27ம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது. படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ராம் சரணுக்கு கியாரா அத்வானி ஜோடியாகியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் அதிகரித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பளத்தை உயர்த்திய ராம்சரண்
முன்னதாக 30 முதல் 40 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்றுவந்த ராம்சரண், தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் சர்வதேச அளவிலான வெற்றியை தொடர்ந்து 100 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க ராம்சரண் 60 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஷங்கர் கூட்டணியில் ராம்சரண் இணைந்துள்ள இந்தப் படம் ஆர்ஆர்ஆர் படத்தை போலவே ராம்சரணுக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரணின் சொத்து மதிப்பு
இந்நிலையில் ராம்சரணின் சொத்து மதிப்பும் 1300 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள அவரது வீடு மட்டுமே பல கோடி மதிப்பிலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லாமல் பல விலையுயர்ந்த கார்களுக்கும் ராம்சரண் சொந்தக்காரராக உள்ளார். ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் இவரது ஷெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஏராளமான விளம்பரங்கள்
விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் ராம்சரண் 30க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் விளம்பர தூதராக உள்ளார். தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவரும் ராம்சரண், விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி உபாசனாவும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள். கடந்த 2012ம் ஆண்டில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது உபாசனா கர்ப்பமாக உள்ளார்.