பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததால் சிறை தண்டனைக்கு ஆளான, அதே கோலார் நகரிலே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜெய் பாரத் யாத்திரையை வருகிற 9-ம் தேதி தொடங்குகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை விமர்சித்தார்.
இதனை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்தவிவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வருகிற மே 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதையொட்டி, மோடியை விமர்சித்து பேசியதால் சிறை தண்டனைக்கு ஆளான அதே கோலார் நகரிலே ‘ஜெய் பாரத்’ என்ற பெயரில் யாத்திரையை மேற்கொள்ள ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார்.
வருகிற 9ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து 11ம் தேதி வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.