பெய்ஜிங்: சீனாவில் பிரிந்து சென்ற காதலியை சமாதானப்படுத்துவதற்காக பணியாற்றும் அலுவலகம் முன்பு கடும் பனி, மழையை பொருட்படுத்தாமல் கையில் பூச்செண்டுடன் சுமார் 21 மணிநேரம் மண்டியிட்டு இளைஞர் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை எட்டலாம் என கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது தான். இதனால் தான் சீனாவும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வித்தியாசமான அறிவிப்புகளையும் சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவில் கல்லூரிகளுக்கு விடுப்பு
அதாவது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 9 கல்லூரிகளில் கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய வேண்டும் என கூறியுள்ள சீனா, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை காதலிப்பதற்காக விடுப்பு அளித்துள்ளது. இந்நிலையில் தான் காதலுக்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் நெஞ்சை உருகவைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியான நிலையில் பாராட்டு, திட்டு என கலவையான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் செய்து வருகின்றனர். அப்படி அந்த நபர் என்ன செய்தார்? என்ற விபரம் வருமாறு:

பிரிந்து போன காதலி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் டஜாவ் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இளம்பெண் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நன்றாக சென்ற இவர்களின் காதலில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையேயான காதல் பிரேக் அப் ஆனது. இதனால் இளைஞர் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். மேலும் பிரச்சனையை தீர்த்து சமாதானமாக செல்ல அவர் முடிவு செய்தார்.

அலுவலகம் முன்பு மண்டியிட்டு..
இதையடுத்து இளம்பெண் பணியாற்றும் நிறுவனத்துக்கு இளைஞர் பூச்செண்டுடன் சென்றார். அலுவலகத்தின் வாசலில் அவர் மண்டியிட்டபடி தனது காதலியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவரது காதலி மட்டும் மனம் இறங்கி வரவே இல்லை. இதனால் இளைஞர் தொடர்ந்து மண்டியிட்டபடியே காத்திருந்தார். ஆனாலும் காதலி பார்க்க வரவேயில்லை.

21 மணிநேரம்..
இதையடுத்து அங்கு மக்கள் மற்றும் போலீசார் கூடினர். அவர்கள் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். தன்னை காதலி ஏற்றுக்கொண்டால் தான் இடத்தை விட்டு நகருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இளைஞர் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. மார்ச் 28 ம் தேதி மதியம் 1 மணிக்கு அந்த இடத்துக்கு சென்ற இளைஞர் முழுஇரவை கடந்து மறுநாள் காலை 10 மணி வரை சுமார் 21 மணிநேரம் அங்கேயே மண்டியிட்டபடி காத்திருந்தும் காதலி வரவில்லை.

கடும் பனி, மழையிலும்..
இதனால் இளைஞர் ஏமாற்றமடைந்தனர். மேலும் அவர் மிகவும் சோர்வடைந்து வேறு வழியின்றி தனது முயற்சியை கைவிட்டார். இதுபற்றி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடும் பனி, மழையை பொருட்படுத்தாமல் காதலியின் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து போராட்டம் நடத்திய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ, போட்டோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

நெட்டிசன்கள் கருத்து
இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரை பாராட்டிய நிலையில் இன்னொரு தரப்போ தன்னை புரிந்து கொள்ளாத காதலிக்காக இப்படி செய்வது சரியல்லை. காதலை கைவிட்டு வாழ்க்கையை பார்க்கும்படி திட்டி அறிவுறுத்தி உள்ளனர். இன்னும் சிலரோ தரையில் மண்டியிட்டு வெறுமனே கெஞ்சி கேட்டால் மட்டுமே காதல் வந்துவிடாது என கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு இந்த இளைஞரின் செயலுக்கு கலவையான கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.