திருவனந்தபுரம்: அரிசி திருடியதாகக் கூறி பழங்குடியின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 14 பேரை குற்றவாளிகள் என கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் அட்டபாடி பகுதி சிந்தகி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது (27). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி வனப்பகுதிக்குள் சென்று குகைகளில் வசித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு சிந்தகி பகுதியிலுள்ள கடைக்கு வந்த இவர் அங்குள்ள கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் போலீஸார் 16 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கே.எம். ரத்தீஷ் குமார் தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட அனீஷ்,அப்துல் கரீம் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குற்ற வாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி இன்று அறிவிக்கவுள்ளார்.