சென்னை: சென்னை கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக புகார் கொடுத்த முன்னாள் மாணவியின் தாயார் மற்றும் 3 தோழிகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தனது இச்சைக்கு இணங்காததால், எனது மகளை வெளியூர் நடன நிகழ்ச்சிக்கும் போகவிடாமல் தடுத்தார் என முன்னாள் மாணவியின் தாயார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனிடையே ஹரிபத்மனுடன் புகாரில் சிக்கிய உதவி நடன கலைஞர்களான சஞ்ஜித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 3 பேர் மீதும் யாரும் இதுவரை எழுத்து மூலம் புகார் கொடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா நாட்டிய கல்லூரி செயல்படுகிறது. அங்கு படித்த மாணவிகள் பாலியல் புகார் கூறி போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்த நிலையில், புகார் கொடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்,
முன்னாள் மாணவி புகார்
இதன்பின்னர் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்தார். அவரது நடவடிக்கையால் படிப்பை முழுவதும் தொடர முடியவில்லை என்று முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனது புகாரில், பேராசிரியர் ஹரிபத்மன் உல்லாசத்துக்கு என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

புழல் சிறை
இந்த புகாரை அடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் பேராசிரியர் ஹரிபத்மன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தவறாக புரிந்துகொண்டனர்
இதனிடையே போலீஸ் விசாரணையின் போது ஹரிபத்மன் தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கூறும் போது, “கேரள மாநிலத்தில் பிறந்தாலும், கலாசேத்ராதான் எனக்கு வாழ்வு கொடுத்தது. இங்கேயே படித்தேன். இங்கேயே வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு மனைவி, 15 வயதில் ஒரு மகன், 6 வயதில் மகள் இருக்கிறார்கள். நடனம் சொல்லிக்கொடுக்கும்போது நான் மாணவிகளிடம் தொட்டு, பேசி பழகி இருக்கிறேன். கண்டிப்பாகவும் இருந்துள்ளேன். அதை மாணவிகள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதை வைத்து என் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது” என ஹரிபத்மன் கூறியதாக போலீசாரிடம் தெரிவித்தாராம்.

நடனம்
இதனிடையே ஹரிபத்மன் மீது புகார் கூறிய மாணவியின் தாயார் மற்றும் அவரது தோழிகள் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் அளித்த முன்னாள் மாணவியின் தாயார் கூறுகையில், ” பேராசிரியர் ஹரிபத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார், நடனம் சொல்லி தருவதாக வீட்டுக்கு அழைக்கிறார். அது நடனம் சொல்லித்தருவதற்காக அல்ல, என்னிடம் உல்லாசமாக இருக்க அவர் துடியாய், துடிக்கிறார், என என் மகள் வேதனைப்பட்டாள்.

தடுத்துவிட்டார்
தனது இச்சைக்கு இணங்காததால், எனது மகளை வெளியூர் நடன நிகழ்ச்சிக்கும் போகவிடாமல் தடுத்துவிட்டார். இதுபற்றி கலாசேத்ரா நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஹரிபத்மன் கொடுத்த தொல்லையால்தான், எனது மகள் படிப்பை முடிக்காமல் பாதியில் வெளியேறினாள்” என்று முன்னாள் மாணவியின் தாயார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தகவல்
முன்னாள் மாணவியின் தோழிகள் கூறும் போது, பேராசிரியர் ஹரிபத்மன் மீது, பல முறை புகார் கொடுத்த போதும், கலாசேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும விசாரணை கூட நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள். எல்லை மீறி நடப்பதை நாங்கள் நேரடியாக பார்த்துள்ளோம் என்றும் வெளி ஊர்களில் நடன நிகழ்ச்சிக்கு செல்லும் போதும், அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார் என்றும் தோழிகள் மூவரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

புகார் கொடுக்கவில்லை
இதனிடையே ஹரிபத்மனுடன் புகாரில் சிக்கிய உதவி நடன கலைஞர்களான சஞ்ஜித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 3 பேர் மீதும் யாரும் இதுவரை எழுத்து மூலம் புகார் கொடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரிபத்மன் மீது ஒரே ஒரு பாலியல் அத்துமீறல் புகார் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் உண்மைக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தததால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் இந்த வழக்கை பொறுத்தமட்டில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.