‘இனி 10 முதல் ப்ளஸ் 2 வரை உதவித் தொகை..’ – சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்.!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திறனறி தேர்வு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்)-யின் முன்முயற்சியை இன்று (3 ஏப்ரல் 2023) தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

செமிகண்டக்டர் டெக்னாலஜி

‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for all) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக கிராமப்புறங்களில் படிக்கும் ஒரு லட்சம் மாணவ- மாணவிகளை இணைப்பதை இந்த ‘ஸ்டெம்’ அணுகுமுறைத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு செமிகண்டக்டர் தொழில்நுட்பம் தொடர்பான விரிவுரைகள் மற்றும் செயல்முறை அனுபவங்களை வழங்கி தங்களின் எதிர்காலத்திற்கான துறையாகத் தேர்ந்தெடுக்க அவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

திறனறி தேர்வு திட்டம்

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, ‘‘இந்த நிகழ்வின் போது ‘திறனறி தேர்வு திட்டம்’ என்ற முக்கியமான புதிய திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வியை தடையின்றி தொடர ஊக்குவித்து உதவுவதே இதன் நோக்கம். பத்தாம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவர்கள் (500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள்) இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஐஐடி மெட்ராஸ் போன்ற முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் 1,000 வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கும் அவர்களின் இளங்கலை மற்றும் முதுகலையின் போது ஆண்டுதோறும் உதவித்தொகையாக 12 ஆயிரம் வழங்கப்படும்.

அரசு பள்ளிகள்

அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்தால், அனைவருக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் சமமாக கிடைக்கும். இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், பள்ளிகளில் சாதகமான சூழலை உருவாக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அனைத்து மாணவர்களும் படிக்கும் இடமாக இன்று அரசுப் பள்ளிகள் மாறி வருகின்றன.

குறிப்பாக செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், சுகாதாரம், தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல களங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இன்றியமையாததாகும்.

சிறந்த முயற்சி

ஐஐடி மெட்ராஸின் இந்தத் திட்டம், கிராமப்புறங்களில் படிக்கும் இளம் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், சமூகப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான சிந்தனைக்கான அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் ஒரு சிறந்த முயற்சியாகும்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.