புதுடெல்லி: சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக நாட்டின் பல பகுதிகளில் ஜி20-க்கான செயல்பாட்டு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற 2-வது செயல்பாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
மத்திய சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 130 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் நேற்று குளிர் மலைப்பிரதேசமான டார்ஜிலிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட பொம்மை ரயிலில் அனைவரும் பயணம் செய்து மகிழ்ந்தனர். இந்த பயணத்தின் இடையில் மலை உச்சியில் நின்று, இயற்கை அழகையும் ரசித்தனர். ஜி20 அழைப்பாளர்கள் அனைவருக்கும் டார்ஜிலிங் நகரில் உள்ள தனது மாளிகையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், சிறப்பு விருந்து அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறும்போது, “ஜி20 வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் பெருமைகளை உலகின் முன்னிறுத்துகிறோம். இதில் டார்ஜிலிங் பெருமையையும் அவர்களுக்கு உணர்த்தி உள்ளோம். நிச்சயமாக இந்த டார்ஜிலிங் வெளிநாட்டவரின் அன்பிற்குரியதாக அமையும்” என்றார்.
சற்று குறைந்த வேகத்தில் செல்லும் டார்ஜிலிங் பொம்மை ரயிலின் பயணத்தில் வழிநெடுகிலும் ஜி20 வெளிநாட்டவர்களை டார்ஜிலிங்வாசிகள் கைகூப்பி வணங்கியும், கொடிகளை அசைத்தும் வரவேற்று மகிழ்ந்தனர். டார்ஜிலிங் நகரின் மால் சாலையில் மேற்கு வங்க மாநிலம் சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் மால் சாலையில் மேற்கு வங்கம் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இந்தோனேசியாவுக்கான இந்தியத் தூதர் ஹகின்யாஸ் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இந்த மூன்று நாள் அனுபவத்தில் இந்தியாவின் மசாலா உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டேன். மேற்கு வங்க கலை நிகழ்ச்சிகளும் மனதை கவர்ந்தன. பொம்மை ரயிலின் பயணத்தை அனுபவிக்க மீண்டும் டார்ஜிலிங் வரவிரும்புகிறோம்” என்றார்.
ஜி20 அழைப்பாளர்களின் இந்த அனுபவத்தால், டார்ஜிலிங் நகருக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டார்ஜிலிங் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கு வங்க மாநிலம் சார்பில் தமிழரான மாவட்ட ஆட்சியர் பொன்னம்பலம் செய்திருந்தார்.