சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், அவருக்கு எதிரான ஒரு அணியை கட்டமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாகி உள்ளது.. அந்தவகையில், முதல் அஸ்திரமாக திருச்சி மாநாட்டை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் டீம்.
சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லியிருந்ததுபோலவே, மக்களை நேரடியாகவே சந்திக்க கிளம்பி விட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமியிடம், 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதாக சொன்னாலும், கட்சி பெரும்பாலும் அவரிடமே இருப்பதாக சொன்னாலும்கூட, இதுவரை ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரையும் தன்பக்கம் சாய்க்க முடியவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்..
கலையுமா கூடாரம்
அமமுக, பாஜக தரப்பில் இருந்து மட்டுமல்லால் நாம் தமிழர் கட்சியில் இருந்தும்கூட, நிர்வாகிகளுக்கு வலையை வீசி அதிமுக பக்கம் கொண்டுவரும்நிலையில், எடப்பாடியால் மிகவும் பலவீனமாக கருதப்படும் ஓபிஎஸ் டீமில் இருந்து, ஒரு நிர்வாகிக்கும் தூண்டிலை போடமுடியவில்லை.. நூலும் விடமுடியவில்லை. ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரத்தும், அப்படி எதுவுமே நடக்கவில்லை..

பழனிசாமிகள்
இன்றுவரை, தனியாக இயக்கம் நடத்தி தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஓபிஎஸ் அந்த அளவுக்கு பலம்வாய்ந்தவர் கிடையாது என்று கருதும் எடப்பாடி பழனிசாமி, அப்படிப்பட்டவரை இன்னமும் விடாப்பிடியாக இயங்க வைப்பது வைத்திலிங்கம் தான் என்றும் உறுதியாக நம்புகிறாராம்.. வைத்திலிங்கம் இருக்கும் தைரியத்தில்தான், ஓபிஎஸ் இன்னமும் அரசியல் செய்கிறார் என்ற காட்டம் எடப்பாடிக்கு நிறையவே உள்ளதாக தெரிகிறது. அதனால்தான், வைத்திலிங்கத்தை அவரது சொந்த ஊரிலேயே வைத்து, அதிர விட வேண்டும் என்று நேரம் பார்த்து காத்திருந்தாராம். அந்தவகையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன் டாக்டர் இன்பன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தபோது, அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

காட்டம் ஓபிஎஸ்
அப்போது பேசும்போது, “என்னைப்போல் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் அதிமுகவில் இருக்கிறார்கள். எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இந்த பழனிசாமி இல்லை என்றால், வேறு ஒரு பழனிச்சாமி வந்து கட்சியை காப்பாற்றுவார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எவனாலும் தொட்டுப் பார்க்க முடியாது” என்று காட்டமாக கூறியிருந்தார். வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே சென்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது அப்போது, பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.

வைத்திலிங்கம்
இந்நிலையில்தான், திருச்சியில் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவது என்று ஓபிஎஸ் டீம் முடிவு செய்துள்ளது.. இந்த மாநாடு, தங்களின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிக்கும் என்றும் கனத்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.. இம்மாநாட்டை நடத்தி தன்னுடைய அணியின் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.. அதற்கான அசைண்மென்ட் வைத்திலிங்கத்திடம்தான் தரப்பட்டுள்ளதாம்.. வைத்திலிங்கம்தான் இந்த பணிகளை ஒருங்கிணைத்தும் வருகிறார்.. அரசியலில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருவதால், நிர்வாகிகளை தன்பக்கம் தக்க வைக்க இந்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ், திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. எனவே அதற்கான அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பு முனை
ஜி கார்னர் ரயில்வே இடம் என்பதால், ரயில்வே நிர்வாகத்திடம் 5 நாட்களுக்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் அணி சார்பில் கடிதம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் சொல்லும்போது, “ஜி.கார்னரில் ஓபிஎஸ் நடத்தும் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. மாநாடு தேதி மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாநாட்டில், அதிகளவு தொண்டர்களை கூட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளோம்” என்கின்றனர்.

டபுள் பார்ட்டி
ஓபிஎஸ், இந்த மாநாட்டினை, திருச்சி பொன்மலை ஜி.கார்னரில் இந்த மாத இறுதியில் மாநாடு நடத்த ஓபிஎஸ் முடிவு செய்திருக்கிறார்.. இம்மாநாடு நடத்துவதற்கான, உற்சாகத்தையும், நம்பிக்கையையும், அந்த 2 கட்சிகள் ஓபிஎஸ்ஸுக்கு தந்துவருவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அப்படி இருக்கும்போது, மாநாடு நடத்துவதற்கான அனுமதி உட்பட மேலும் சில உதவிகள் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துவிடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சட்டரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும்கூட, இந்த மாநாட்டை அதிக அளவு நம்பி கொண்டிருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.. இதை எடப்பாடி தரப்பும் உற்று கவனித்து கொண்டிருக்கிறது..!!