சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கிய ஏழு வயது சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் பட்டாளம் பகுதியில் உள்ள ஹாஜி முகமது அப்பாஸ் தெருவில் வசித்து வருபவர் ராகேஷ் குப்தா உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த இவர் சென்னையில் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார்.
தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் தேஜா குப்தா என்ற மகன் இருந்தான். அந்த சிறுவன் வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இரண்டு மாதம் பள்ளி விடுமுறை என்பதால் நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடுமாறு தந்தையிடம் கூறியிருக்கிறார்.
தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வேப்பேரியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மை லேடி பார்க் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு சேர்த்திருக்கிறார் இங்கு சுமார் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13 நாட்களாக பயிற்சிக்கு சென்று வந்துள்ளார் தேஜா குப்தா.
ராகேஷ் குப்தா தினமும் மகனை பயிற்சிக்கு அழைத்து சென்று வந்திருக்கிறார். சம்பவ தினத்தன்று அவரது தாத்தா தேஜா குப்தா வை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ராகேஷ் குப்தா அவருடன் இணைந்து இருக்கிறார். பயிற்சி முடிந்த அனைத்து சிறுவர்களும் வந்த பிறகு தனது மகன் மட்டும் வராததால் பயிற்சியாளர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் கழிவறையில் இருப்பதாக கூறவே அங்கு சென்று பார்த்து இருக்கிறார் ஆனால் அங்கும் தனது மகன் இல்லை. இந்நிலையில் நீச்சல் குளம் சென்று பார்த்த போது நீருக்கு அடியில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார் சிறுவன்.
இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகியோரின் மீது அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறது.