நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைதிகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 காவலர்கள் அதிரடியாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பியாக பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. 10க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் அம்பாசமுத்திரம் தனிப்படை எஸ்.ஐ சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தானகுமார் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
newstm.in