அமெரிக்க இதழான `பிளேபாய்‘ கவர்ச்சிப் படங்கள், பாலியல்ரீதியிலான கட்டுரைகளை வெளியிடக்கூடிய ஒன்று. 300 பக்கங்களைக்கொண்ட இந்த இதழ் ஒவ்வொரு காலாண்டுக்கும் பிரபலமான அம்சங்களை முன்வைத்து வெளியாகும். உலகம் முழுமைக்கும் இதற்கு வாசகர்கள் இருந்துவருகின்றனர். இந்த இதழுக்குத் திரைப் பிரபலங்கள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் பேட்டி தருவதும், இந்த நிறுவனம் கவர்ச்சிகரமான உடை அணிந்திருப்பவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வைப்பதும் இயல்பானது.
இந்த நிலையில், பிளேபாய் இதழில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சர் மார்லின் ஷியப்பாவின் படம் அட்டைப்படமாக வந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மார்லின், பிரான்ஸ் நாட்டின் சமூகப் பொருளாதாரத்துறையின் அமைச்சர், நீண்ட காலமாகப் பெண்களின் உரிமைக்காகவும் LGBTQ+ சமூக மக்களின் உரிமைக்காகவும் போராடி வருபவர். 2017-ல் நாட்டின் முதல் பாலின சமத்துவ இலாகாவைக் கவனிக்கும் அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர், இந்தச் சட்டத்தின் மூலம் பெண்களைத் துன்புறுத்தினால் உடனடியாக அபராதம் விதிக்க இயலும்.

மார்லின் பிளேபாய் இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பெண்களின் உரிமை சார்ந்த விவகாரம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்டவைக் குறித்துப் பேசியிருக்கிறார். இதற்கு அவர் சார்ந்த கட்சி, எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. பிளேபாய் இதழுக்கு பிரான்ஸ் அமைச்சர் பேட்டியளித்திருந்தாலும், அவர் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. ஒரு நாட்டின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர் இது போன்ற ஆபாசம் நிறைந்த இதழுக்குப் பேட்டி கொடுக்கலாமா என பிரான்ஸ் அரசியலில் விவாத அனல் பறந்துகொண்டிருந்தது.
“ஏற்கெனவே பிரான்ஸ் அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகப் பரபரக்கப்படுகிறது. இந்த நிலையில், கூடுதலாக விமர்சிப்பதற்கு அரசு தரப்பே அவர்களுக்கு காரணங்களைத் தேடித் தருவது போலான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் அமைச்சர் மார்லின் ஷியப்பா” என்கிறார்கள்.
பிரான்ஸில் ஓய்வுபெறும் வயதை 64-ஆக உயர்த்திய அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துவருகிறது. தொடர் போராட்டத்தால் உள்நாட்டு நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 20 நாள்களாக நடந்துவந்த போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. அதைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. எரியும் தீயில் எண்ணை ஊற்றும்விதமாக தற்போது பிளேபாய் இதழின் அட்டைப்படத்தில் பிரான்ஸ் அமைச்சரின் புகைப்படம் வந்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தற்போது பிரான்ஸ் அரசின்மீது மக்களுக்குப் பெரும் அதிருப்தி நிலவும் வேளையில், இதை அமைச்சர் மார்லின் செய்திருக்கக் கூடாதென பிரான்ஸ் அதிபர் எலிசபெத் பார்ன் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் விளக்கம் தரும் விதமாக ட்வீட் செய்திருந்த அமைச்சர் மார்லின், “பெண்கள் தங்கள் உடலைக்கொண்டு எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் விரும்பியதைச் செய்யும் உரிமையை நான் பாதுகாக்கிறேன். பிற்போக்குவாதிகளுக்கு இவை எரிச்சல் தருகிறதா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் விவகாரம் குறித்து பிளேபாய் இதழ், “மார்லின் ஷியப்பா பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசி வருகிறார். பெண்ணிய நோக்கத்துக்காகவும்தான் நாங்கள் செயல்படுகிறோம். இது ஆபாசப் பத்திரிகை அல்ல” என்று தெரிவித்திருக்கிறது.