தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `மசோதா நிறுத்திவைக்கப்பட்டாலே நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ எனக் கடந்த வாரம், ராஜ் பவனில் மாணவர்களிடம் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் நேற்று காலை தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையே, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மசோதா நிறுத்திவைக்கப்பட்டால் நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம் என அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாகவும், காங்கிரஸுடனான சகவாசம் ஸ்டாலினின் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நாராயணன் திருப்பதி தன் ட்விட்டர் பக்கத்தில், “ `Withhold என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாகப் பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, சட்டமன்றத்தின் இறையாண்மையைக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். ஆளுநரின் அரசியல் சட்ட விசுவாசத்தை… அரசியல் விசுவாசம் விழுங்கிவிட்டது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
`With hold’ என்றால் நிராகரிக்கப்பட்டது என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 200, 111 மிகத் தெளிவாகக் கூறுகின்றன. அதன்படி, அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, சட்டத்தின் இறையாண்மையை ஆளுநர் எங்கே கொச்சைப்படுத்திப் பேசியிருக்கிறார் என்பதை முதல்வர் விளக்க வேண்டும். நீட் மசோதா குறித்த வழக்கில் 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் `With hold’ என்பதற்கான விளக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறது மத்திய அரசு என்பதை முதல்வர் அறிந்துகொள்வது சிறப்பைத் தரும்.

`கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பொன்மொழியை மறந்துவிடாமல் பணியாற்ற வேண்டும்’ என்று 2011-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டதை மு.க.ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸின் `அரசியல் சகவாசம்’ அவரின் `அரசியல் சட்ட விசுவாசத்தை’ விழுங்கிவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
அரசியலமைப்பு சட்டம் குறித்த அறிவுரைகளை திரு. @mkstalin அவர்கள் மத்திய அரசிடமோ அல்லது உச்சநீதிமன்றத்திடமோ கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
(குறிப்பு : ஆளுநருக்கு ஆதரவான பதிவல்ல இது. நம் மாண்புமிகு. முதல்வருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த புரிதலை மேலும் வலுவாக்கும் பதிவே.(4.4)
— Narayanan Thirupathy (@narayanantbjp) April 11, 2023
அரசியலமைப்புச் சட்டம் குறித்த அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடமோ, உச்ச நீதிமன்றத்திடமோ கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ஆளுநருக்கு ஆதரவான பதிவல்ல இது. நம் முதல்வருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த புரிதலை மேலும் வலுவாக்கும் பதிவே” என்று குறிப்பிட்டிருக்கிறார்.