காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு முற்றிலுமாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்தனர். இந்த கால கட்டத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்தது. இந்நிலையில்தான் 2021ம் ஆண்டு மீண்டும் தலிபான்கள் பொறுப்பேற்றனர்.
இது உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தலிபான்கள் மீண்டும் தங்களது அட்டூழியங்களை தொடங்கி விடுவார்கள் என பல நாடுகள் அச்சம் தெரிவித்தன. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற தலிபான்கள், ‘பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், அவர்களின் கல்வி ஊக்குவிக்கப்படும்’ என்று கூறினர். எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளை போல இருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது வரை இந்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
மட்டுமல்லாது கூடுதல் ஒடுக்குமுறைகள் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்தன. அதாவது 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்றக்கூடாது என்று கடந்த ஆண்டு விதிமுறை விதிக்கப்பட்டது. உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், “6ம் வகுப்புகளுக்கு மேல் பாடம் நடத்துவதற்கான ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை என்பதால்தான் நாங்கள் இந்நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்” என்று தலிபான்கள் சமாளித்தனர். பின்னர் அடுத்ததாக பெண்களின் உயர் கல்வி மீது தலிபான்களின் கவனம் திரும்பியது.

இருபாலர் பல்கலைக்கழகங்களில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் அமர்வதற்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவாறு சேர்ந்து அமர்ந்து பயிலும் வகுப்பறையில் திரைச்சீலைகள் கொண்டு இருபாலரும் பிரிக்கப்பட்டனர். இருந்து திருப்பதியடையாத தலிபான்கள் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக அறிவித்தனர். அப்போதுதான் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகளுக்கு மாணவிகள் கட்டணம் செலுத்தி சேர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போக கூடாது போன்ற உத்தரவுகளை தலிபான்கள் தொடர்ந்து விதித்து வந்தனர். இந்நிலையில் தற்போது புதிய உத்தரவையும் அவர்கள் பிறப்பித்துள்ளனர். அதாவது, தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் அமைந்துள்ள உணவகத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். பெண்கள் மட்டுமல்லாது குடும்பங்களும் இந்த உணவகத்திற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இடங்களில் ஆண்/பெண் ரொமான்ஸ் செய்து கொள்வது அதிகரித்திருப்பதால் அதனை தடுக்கும் நோக்கத்தில்தான் இதுபோன்று சட்டங்கள் விதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் மேலும் கூறுகையில், இந்த தடையானது ஹெராட் நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும், நாடு முழுவதும் இந்த தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர். எப்படி இருந்தாலும், பெண்களுக்கான தடையை நியாயப்படுத்துவுது ஏற்புடையதல்ல என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.