கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: ஒருவழியா முதல் லிஸ்ட் ரெடி… பாஜகவின் 189 வேட்பாளர்கள் இதோ!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

பாஜக தீவிரம்

எனவே ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த அமைச்சர்கள் கர்நாடகாவிற்கு வருகை புரிந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சூழலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் பாஜக தரப்பு காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

மும்முனை போட்டி

கர்நாடகாவில் பிரதான கட்சிகளாக விளங்கும்
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை பல கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஆனால் பாஜகவில் இருந்து ஒரு பட்டியல் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாக போட்டியிட பாஜகவினர் தயங்குகின்றனர், வேட்பாளர்களே இல்லை என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை அவர்கள் ஷிகோவன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

யாருக்கெல்லாம் சீட்

இதையடுத்து கவனம் ஈர்க்கக் கூடிய வேட்பாளர்கள் என்று பார்த்தால், பத்மநாப நகர் மற்றும் கனகபூரா ஆகிய தொகுதிகளில் ஆர்.அசோகா போட்டியிடுகிறார். இவர் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அடுத்து தெற்கு பெங்களூரு தொகுதியில் எம்.கிருஷ்ணப்பா போட்டியிடுகிறார்.

எடியூரப்பா மகன்

ஷிகாரிபுரா தொகுதியில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா களம் காண்கிறார். பெல்லாரி நகர்ப்புற தொகுதியில் இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். சிக்கபல்லபூர் தொகுதியில் இருந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் களமிறங்குகிறார்.

பாஜக அமைச்சர்கள்

மல்லேஸ்வரம் தொகுதியில் இருந்து திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் போட்டியிடுகிறார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவிக்கு சிக்மகளூருவில் சீட் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருனா தொகுதியில் பாஜக சார்பில் வி.சோமன்னா போட்டியிடுகிறார்.

அதுமட்டுமின்றி சாம்ராஜ்நகர் தொகுதியிலும் சோமன்னா களம் காண்கிறார். மகாலட்சுமி லேஅவுட் தொகுதியில் அமைச்சர் கோபாலையாவும், மல்லேஸ்வரம் தொகுதியில் அமைச்சர் அஸ்வத் நாராயணனும் போட்டியிடுகின்றனர். அதாவது, அமைச்சர்கள் பலருக்கு இரண்டு தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.