'சின்ன தம்பி' 32 ஆண்டுகள் – நினைவு கூறும் குஷ்பு

பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரபு, குஷ்பு, ராதாரவி, கவுண்டமணி மற்றும் பலர் நடித்து 1991ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி வெளிவந்த படம் 'சின்ன தம்பி'. தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மாபெரும் வெற்றியையும், வசூலையும் குவித்த ஒரு படம். அப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

பிரபுவின் அப்பாவித்தனம், குஷ்புவின் குழந்தைத்தனமான அழகு, ராதாரவி உட்பட அண்ணன்களின் கண்டிப்பு, கவுண்டமணியின் கலக்கல் நகைச்சுவை, மனோரமாவின் அம்மா பாசம், என அப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மாநகரம் முதல் கிராமம் வரை பலரையும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்தது. சின்னச் சின்ன ஊர்களில் கூட 100 நாட்களைக் கடந்து ஓடியது.

இளையராஜாவின் இனிமையான இசையில், “அரைச்ச சந்தனம், தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், அட உச்சந்தல, நீ எங்கே என் அன்பே,” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. அப்போதெல்லாம் ரெக்கார்டிங் கடைகளில் இப்படத்தின் பாடல்களை சேகட்டுகளின் இரண்டு பக்கத்திலுமே ரெக்கார்டிங் செய்து கேட்டவர்கள் அதிகம்.

தமிழில் பெரும் வெற்றிக்குப் பிறகு கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்து அங்கும் வெற்றி பெற்றது.

படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதையொட்டி படத்தின் கதாநாயகியான குஷ்பு, “சின்னதம்பி', தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி. வாசு சாருக்காகவும், பிரபு சாருக்காகவும் துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்த இசைக்காகவும், மறைந்த கே பாலு சாரின் தயாரிப்புக்காகவும் என்றும் என்றி. ஒவ்வொருவரின் இதயத்திலும், மனங்களிலும் என்றென்றும் பதிந்தவர் நந்தினி. மீண்டும் ஒரு முறை நன்றி,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.