கர்நாடகாவில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை காட்டிலும் லேட்டாக பட்டியலை வெளியிட்டிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் குறித்த விவாதம் பெரிய அளவில் கிளம்பியுள்ளது. அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக யாரை நிறுத்தியுள்ளது? அவர்கள் வெற்றியை பெற்று தருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் வாக்குகள்
கர்நாடகாவை பொறுத்தவரை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெங்களூருவிற்கு முக்கிய இடம் உண்டு. பெங்களூரு நகர்ப்புறம் , பெங்களூரு கிராமப்புறம் என இரண்டு மாவட்டங்கள் இருக்கின்றன. அதில், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 28 சட்டமன்ற தொகுதிகளும், பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.
பெங்களூரு மண்டலம்
இவற்றில் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 11, மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 என வெற்றி பெற்றிருந்தன. எனவே காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமிருப்பதை பார்க்க முடிகிறது. இதை முறியடித்து பாஜக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற இம்முறை வியூகம் வகுத்துள்ளது.
பாஜக வியூகம்
குறிப்பாக தமிழர்களின் வாக்குகளை கவர தமிழ் பேசும் நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய வசதிகளை செய்து தரும் வகையில் பிரத்யேக திட்டம் ஒன்றை உருவாக்கி, அதை பிரச்சாரக் களத்தில் பயன்படுத்த உள்ளனர். இனி பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாவட்டத்தில் கவனம் ஈர்க்கும் வேட்பாளர்களை பற்றி பார்க்கலாம்.