சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மலைகளால் சூழப்பட்ட செங்காடு எனும் சிறு கிராமம் பருத்தி விளைச்சலுக்குப் பெயர்பெற்றிருக்கிறது. இந்தப் பருத்தியை வைத்து கொள்ளை லாபம் பார்க்க ஆசைப்படும் பிரிட்டிஷ் அரசு, ராபர்ட் க்ளைவ் எனும் கொடூரமான ஆங்கிலேய அதிகாரியை வைத்து அப்பாவி கிராமத்தினரைக் கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குகிறது.

இந்நிலையில், 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்கிறது பிரிட்டிஷ் அரசு. இந்தச் செய்தியைச் சுதந்திரத்திற்காக ஏங்கித்தவிக்கும் அம்மக்களிடம் இருந்து மறைத்து, தன் மகனின் இறப்பிற்குப் பழிவாங்க அதற்கு அடுத்த நாளான 1947 ஆகஸ்ட் 16-ம் தேதி ஆங்கிலேயப் படைகளுடன் செல்கிறான் ராபர்ட் க்ளைவ். ராபர்ட்டின் மகனைக் கொன்றது யார், அன்று அம்மக்களுக்கு என்ன ஆனது, ராபர்ட் க்ளைவிடம் இருந்து அம்மக்கள் தப்பினார்களா, சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கினார்களா என்பதை நிதானத்தையும் விறுவிறுப்பையும் கலந்து திரைக்கதை அமைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார்.
கதாநாயகன் கௌதம் கார்த்திக், ‘பரமன்’ என்ற சேட்டைக்கார இளைஞனின் பாத்திரத்தை ஏற்றுள்ளார். காமெடி காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கும் கௌதம் கார்த்திக், சென்டிமென்ட் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில், சமகால இளைஞர்களின் வார்த்தை உச்சரிப்பும், வார்த்தை பிரயோகமும் அவரிடம் வந்து போகின்றன. கதாநாயகியான அறிமுக நடிகை ரேவதிக்குப் புதுமையான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த பணியை நிறைவாய் செய்திருக்கிறார்.
‘குக் வித் கோமாளி’ புகழ் காமெடி ஒன்லைன்களோடு நின்றுவிடாமல், கதையிலும் கொஞ்சம் வந்து போகிறார். நாக்கு அறுபட்ட நிலையில், சுதந்திரம் கிடைத்த செய்தியை தன் மக்களுக்குச் சொல்ல எடுக்கும் முயற்சிகள் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் பரிதாபத்தையும் வரவைக்கின்றன.

வில்லன்களாக ரிச்சர்ட் அஷ்டனும் (ராபர்ட் க்ளைவ்), அவரது மகனாக ஜாசன் ஷாவும் (ஜஸ்டீன்) வருகிறார்கள். தொடக்கக் காட்சிகளிலேயே இருவரின் ‘கொடூர’ வில்லனிஸம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறது என்றாலும், மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்ட கொடூரக் காட்சிகள் ஓவர் டோஸ் ஆகிவிடுகின்றன. அவர்கள் இருவரின் நடிப்பும் படு செயற்கைத்தனமான மிகை நடிப்பாகத் தெரிவதால் ஒரு கட்டத்தில் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. ஜமீனாக வரும் மதுசூதன் ராவ், சுதந்திர இந்தியாவின் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், கௌதம் கார்த்திக்கின் தாயாக வரும் நீலிமாராணி ஆகியோர் தங்களின் பணிகளைக் குறைகளின்றி செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர, செங்காடு கிராமத்தினராக வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக அந்தப் பாட்டி கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் அதற்கு அவரின் பங்களிப்பும் சிறப்பு!
முதற்பாதியில் செங்காடு கிராமம், கொடூரமான அதிகாரியான ராபர்ட் க்ளைவ், அவனால் தினமும் 16 மணிநேரம் மாடாய் உழைக்கும் மக்கள், ராபர்ட்டின் மகன் ஜஸ்டின் செய்யும் பாலியல் வன்கொடுமைகள், இவர்களை எதிர்க்கத் திராணியற்று செத்து மடியும் மக்கள், மறுபக்கம் கௌதம் கார்த்திக்கின் சேட்டைகள், ஒருதலை காதல் என நிதானமாகக் கதை நகர்கிறது. ஆனால், இதுவரை சுதந்திரப் போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட பல படங்களில் பார்த்துப் பழகிய பாத்திரப் படைப்புகளே இதிலும் வந்துபோகின்றன. கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாத ஆங்கிலேயர்கள், அவர்களுக்குத் துணைபோகும் ஜமீன், ஊரை வெறுக்கும் நாயகன், பின்னர் உண்மையையறிந்து ஊருக்காக நிற்பது என டெம்ப்ளேட் காட்சிகள் நிறைய!
சுதந்திரம் கிடைக்கப்போவதையே ஒரு கிராமத்தினரிடம் இருந்து மறைப்பது என்ற சுவாரஸ்யமான ஒன்லைன் மட்டுமே ஈர்க்கிறது. அதைத் தாண்டி, செங்காடு எனும் கிராமம், அதன் நிலவியல் அமைப்பு என சில விஷயங்கள் மட்டுமே முதற்பாதியைக் காத்து நிற்கின்றன.

இரண்டாம் பாதியில், திரைக்கதை விறுவிறுவென பயணிக்கிறது. ஆனால், எல்லாமே எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகளாக இருப்பதும், கோர்வையற்று அடுக்கி வைக்கப்பட்ட காட்சிகள் போலவும் இருப்பதால், பரபரப்பிற்குப் பதில் அயர்ச்சியே தொற்றிக்கொள்கிறது. இறுதிக்காட்சியும் நம்பகத்தன்மையற்றதாக இருப்பதால், சுதந்திரம் குறித்த எவ்வித அழுத்தத்தையும், உணர்ச்சிகளையும் தராமல் படம் முடிந்து போகிறது. நாக்கு அறுபட்ட புகழின் கதாபாத்திரம் சொல்ல முடியாத ரகசியம், பக்கத்து ஊர் சென்று அதே உண்மையைத் தெரிந்துகொண்ட கதாபாத்திரம், போஸ் வெங்கட்டின் இந்திய அதிகாரி கதாபாத்திரம் போன்றவை அடுத்து என்ன செய்யப்போகிறது என்று ஆவல் ஏற்படும்போதே காணாமல் போகின்றனர், அல்லது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் போகின்றனர்.
ஒரு ஏகாதிபத்திய நாடு, ஒரு குக்கிராமத்தை வதைத்து, அம்மக்களின் உழைப்பையும், அக்கிராமத்தின் வளத்தையும் சுரண்டிக் கொள்ளை லாபம் பார்க்கிறது. இந்தச் சுரண்டலின் வீரியத்தைத் தொடக்கக் காட்சிகளில் காட்டியிருந்தாலும், காட்சிகள் நகர நகர அக்கிராமத்தினரின் ஒரே பிரச்னை `பெண்கள் மானத்தோடு இருந்தால்தான், நாமும் மானத்தோடு இருக்க முடியும்’ என்பதுதான். இது சமகால சமூகப் பிரச்னைகள் மற்றும் அதிகார ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகக் கடந்துபோகிறதே தவிர, சுதந்திரமே இல்லாத துயரத்தைப் பெரிதாகக் கடத்தவே இல்லை.

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன்.ஆர்-இன் படத்தொகுப்பும் படத்திற்குப் பெரும்பலம் சேர்த்திருக்கின்றன. வெட்ட வெளியில் உள்ள நூற்பாலை, இரவு நேர மலைக்கிராமம் என எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஷான் ரோல்டனின் இசையில் முதல் பாடல் தவிர்த்து, மற்ற காதல் பாடல்கள் வேகத்தடையாகவே உள்ளன. பின்னணி இசை பலம்தான் என்றாலும், பாடல்களிலும் பின்னணியிசையிலும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் மேற்கத்திய இசை அந்நியமாகத் தெரிகிறது. டி.சந்தானத்தின் கலை இயக்கமும், பெருமாள் செல்வத்தின் ஆடை வடிவமைப்பும் மொத்த படத்திற்கும் உயிர் தருகிறது.
இரண்டாம் பாதியில் திக்கற்று அலையும் கதைக்குக் கடிவாளம் போட்டு, சுதந்திரம் பெறாத காலகட்டத்தின் பிரச்னைகளைக் கொஞ்சம் நம்பகத்தன்மையோடு அணுகியிருந்தால் இந்த `ஆகஸ்டு 16 1947′ ஒரு முக்கியமான வரலாற்றுப் புனைவு படைப்பாக இருந்திருக்கும்.