
பிரபல தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேஷுப் மஹிந்திரா காலமானார்.
மஹிந்திரா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் கேஷுப் மஹிந்திரா. அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர் கேஷுப் மஹிந்திரா. பின்னர் தனது தந்தை ஜகதிஷ் சந்திர மஹிந்திரா தொடங்கிய மஹிந்திரா குழுமத்தில் 1947ஆம் ஆண்டில் கேஷுப் மஹிந்திராவும் இணைந்தார்.
1963ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை மஹிந்திரா குழுமத்தின் தலைவராக கேஷுப் மஹிந்திரா பதவி வகித்தார். இவரது தலைமையின் கீழ் மஹிந்திரா குழுமம் பல்வேறு தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு நல்ல வளர்ச்சியை அடைந்தது.
2012ஆம் ஆண்டில் கேஷுப் மஹிந்திரா பணி ஓய்வு பெற்றபோது அவரின் சகோதரர் மகனான ஆனந்த் மஹிந்திராவை (Anand Mahindra) மஹிந்திரா குழுமத்தின் தலைவராக அறிவித்தார் கேஷுப் மஹிந்திரா.
ஒரு காலத்தில் மஹிந்திரா என்றால் டிராக்டர்களும், ஜீப்களும் மட்டுமே நினைவுக்கு வரும். இப்போது ஐடி துறை, ரியல் எஸ்டேட், ஹோட்டல், பைனான்ஸ் என பல வகையான தொழில்களையும் செய்து வருகிறது. இதற்கு பிரதான காரணமாக இருந்தவர் கேஷுப் மஹிந்திரா.
இந்நிலையில் கேஷுப் மஹிந்திரா (Keshub Mahindra) சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 99.