வாஷிங்டன்-ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ‘நேட்டோ’ நாடுகள் வழங்கிய உதவிகள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டது தொடர்பாக, 21 வயது இளைஞர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷ்யாவுக்கு எதிரானதாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்காவின் ‘ஹிமார்ஸ்’ ராக்கெட் பற்றிய குறிப்புகளும், அந்நாட்டு ராணுவ ரகசிய ஆவணங்களும் வெளியானதை அடுத்து, அமெரிக்க உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தியது.
இதன்முடிவில், ஜேக் டெக்சீரியா என்ற 21 வயது இளைஞர் நேற்று உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ‘மாசாசூசெட்ஸ் ஏர் நேஷனல்’ பிரிவில் முதல் தர விமானப் படை வீரரான ஜேக், ராணுவ தொலை தொடர்பு நெட்வொர்க் மற்றும் கேபிளிங் மையங்களை கையாளும் திறன் கொண்டவர் என கூறப்படுகிறது. இது குறித்து உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
‘டிஸ்கார்ட் எனப்படும் ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கான சமூக ஊடகத்தின் வாயிலாக, இந்த ராணுவ ரகசியங்கள் கசிந்துள்ளன.
இந்த தளத்தில், ஜேக் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார். எவ்வளவு ஆவணங்கள் கசிந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனாலும், 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை இவர் வெளியிட்டுள்ளார்.
இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.